அடிப்படை வசதி கேட்டு 2வது மண்டல அலுவலகம் முற்றுகை

திருப்பூர், ஜன.13: அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட எம்.எஸ்.நகர், திருநீலகண்டபுரம், ஏகேஜி நகர், டிஎம்எஸ் நகர் பகுதிகளில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை முறையாக அறிவித்து மாற்று ஏற்பாடு செய்யாததால் இப்பகுதி முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது. பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட குழிகளால் வாகனங்களில் பயணிக்க முடியாத நிலை உள்ளது. எஸ்.எஸ்.நகர் விரிவு, ஜெ.பி.நகர் மற்றும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கப்படவில்லை. நான்காவது குடிநீர் திட்ட பிரதான குழாய்களையும் சில குடியிருப்புகளில் பதிக்கவில்லை.எனவே, இப்பிரச்னைக்கு தீர்வு காணவும், குடிநீர் கசிவை சரி செய்வது, குப்பையை உடனடியாக அகற்றுவது, கழிவுநீரை வடிகால் மூலம் வெளியேற்றுவது, எரியாத வீதி விளக்குகளை சரி செய்வது, 60 அடி சாலை, எம்.எஸ்.நகர், கொங்கு மெயின் ரோடு பணிகளை விரைந்து முடிப்பது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி மனுக் கொடுக்கும் முற்றுகை போராட்டத்தை நேற்று நடத்தியது.

நஞ்சப்பா நகரில் உள்ள இரண்டாவது மண்டல அலுவலகம் முன்பு நடந்த இப்போராட்டத்தில் கட்சியின் வடக்கு மாநகரச் செயலாளர் கணேசன், மாநகரக்குழு உறுப்பினர்கள் சௌந்தரராசன், ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜெயகிருஷ்ணன், மரிய சிசிலியா உள்பட கலந்து கொண்டனர். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதன் தொடர்ச்சியாக மாநகராட்சி மண்டல உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Related Stories: