வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு பயிற்சி

கூடலூர், ஜன. 13:  முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் வன உயரடுக்கு படை மூலம் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு தீ மேலாண்மை மற்றும் ஆபத்துக் கால முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு வனத்துறையின் பயிற்சி பெற்ற வன உயரடுக்கு படை (Elite Force) உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் தலைமையில் முதுமலை புலிகள் காப்பக களப்பணியாளர்களுக்கு தீ மேலாண்மை, முதலுதவி சிகிச்சை, வனப் பகுதியில் ரோந்து செல்லும் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள், ஆற்று படுகைகளை கயிறுகள் கொண்டு  கடப்பது, உயரமான மரம் மற்றும் கட்டிங்களில்  ஏறுவது, போன்ற பயிற்சிகளும் செயல் முறை மூலம் விளக்கமும் நேற்று அளிக்கப்பட்டது. இந்தியாவிலையே முதன்முறையாக தமிழக வனத்துறையில் நமது பாரம்பரிய இன நாய்களான கன்னி, கோம்பை, சிப்பிப்பாரை, பாரை போன்ற பயிற்ச்சியளிக்கப்பட்ட நாய்கள் வனக்குற்றங்களை கண்டறிவதில் செயல்படும் விதங்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.   இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: வன உயரடுக்கு படையானது குரங்கனி தீ விபத்திற்கு பின்பு அதுல்யா மிஸ்ரா பரிந்துரையின்படி உருவாக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டு பாரம்பரிய இன நாய்களுக்கு பயிற்சி அளித்து அவற்றை ராணுவம், காவல் துறை போன்றவற்றில், துப்புதுலக்குதல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், கடத்தல் பொருட்களை அடையாளம் காணுதல், ஆபத்து காலங்களில் உதவுதல் போன்ற பணிகளுக்கு சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குரங்கணி தீ விபத்துக்குப் பின் வனத்துறையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உயரடுக்கு பாதுகாப்பு படையில் நாட்டிலேயே முதல் முறையாக தமிழக வனத்துறையில் பாரம்பரிய நாய்கள் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.  உயர் கலப்பின வகை நாய்களை இது போன்ற பணிகளில் ஈடுபடுத்தும் போது ஏற்படும் பிரச்னைகள் இந்த பாரம்பரிய இன நாய்களுக்கு ஏற்படுவதில்லை. இந்த வகை நாய்களை பயன்படுத்துவது செலவு குறைவானதாகவும், நோய் தாக்குதல்களுக்கு ஈடு கொடுப்பதாகவும், எளிதில் பயிற்சி அளிக்கக்கூடியதாகவும் உள்ளது. இப்பயிற்சியானது களப்பணியாளர்களக்கு வனப்பகுதிகளில் பணியின் போது ஏற்படும் இடர்களை எதிர்கொள்ளும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்வாறு வனத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories:

>