ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

ஈரோடு,  ஜன. 13:   ஈரோட்டில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை போலீசார்  கைது செய்து, அவரிடம் இருந்து ஐம்பொன் முருகன் சிலை, 3.25 பவுன் நகை  போன்றவற்றை மீட்டனர். ஈரோடு சாஸ்திரி நகர் கல்யாண சுந்தரம் வீதியில்  வெற்றி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறையில் விநாயகர்  சிலைக்கு அருகே ஐம்பொன்னால் ஆன ஒன்றரை அடி முருகன் சிலை வைக்கப்பட்டு பூஜை  செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி நள்ளிரவில்  கோயில் கருவறையின் கிரில் கேட்டினை வளைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரூ.80 ஆயிரம்  மதிப்புள்ள ஐம்பொன் முருகன் சிலையை திருடி சென்றனர்.  இது குறித்து ஈரோடு  தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலையை திருடிய மர்ம நபர்களை தேடி  வந்தனர். இந்நிலையில், சிலை திருடப்பட்ட கோயிலின் சுற்றுப்புற பகுதிகளில்  பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு  செய்தபோது, 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சிலை திருட்டில் ஈடுபட்டது  தெரியவந்தது.    இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர்  ஈரோடு மோளக்கவுண்டம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியை சேர்ந்த வெங்கடேஷ் (55)  என்பது தெரியவந்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், எஸ்.எஸ்.ஐ.  முருகேசன் தலைமையிலான போலீசார் நேற்று அந்த நபர் வீட்டில்  பதுங்கியிருக்கும்போது சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும், அவர் வீட்டில்  மறைத்து வைத்திருந்த ஐம்பொன் சிலையையும் மீட்டு, வெங்கடேஷிடம் தீவிர  விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேஷ், சிலை திருடியதையும், ஈரோடு நாடார்  மேடு பழைய கல்லிவலசு பகுதியை சேர்ந்த ரஞ்சித்து குமார் என்பவர் வீட்டில்,  கடந்த டிசம்பர் 24ம் தேதி பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3.25 பவுன்  நகைகளை திருடியதையும் ஒப்புக்கொண்டார். பின்னர், அவர் திருடிய 3.25 பவுன்  நகையையும் போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து, வெங்கடேஷ் மீது தெற்கு  போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

Related Stories: