மழைநீர் வரத்து அதிகரிப்பு வீராணம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3000 கனஅடி உபரி நீர் திறப்பு

காட்டுமன்னார்கோவில், ஜன. 13: காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும் மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்கின்ற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஒடை, வழியாக மழைநீர் வரத்து இருக்கும்.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் நேரடி பாசனமும் சுமார் 1 லட்சம் ஏக்கர் மறைமுகமாகவும் பாசனம் பெறுகிறது. ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும் மேலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் நீர்மட்டத்திற்கேற்ப வினாடிக்கு 60 கனஅடிமுதல் 140 கனஅடி வரை தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5 மாதங்களில் அதிக நீர்வரத்து காரணமாக வீராணம் ஏரி 4 முறை முழு கொள்ளளவை எட்டியது.

இந்நிலையில் கடந்த 4 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரிக்கு மழைநீர் வரத்து வினாடிக்கு 3000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயரத் தொடங்கியது. வீராணம் ஏரியை பாதுகாக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று 3வது முறையாக லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடை  வழியாக உபரி நீர் வெளியேற்றினர். தற்போது ஏரியின் நீர்மட்டம் 46அடிக்கு மேல் உயரத் தொடங்கியுள்ளது.

இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் லால்பேட்டை வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீரும், சேத்தியாத்தோப்பு விஎன்எஸ்எஸ் மதகு மூலம் வினாடிக்கு 700 கனஅடி தண்ணீரும் சென்னைக்கு குடிநீருக்காக விநாடிக்கு 58 கனஅடி தண்ணீரை அனுப்பி ஏரியின் நீர்மட்டத்தை சமமாக வைத்து வருகின்றனர்.

Related Stories:

>