வாகன திருடர்கள் 2 பேர் கைது

ராசிபுரம், ஜன.13: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐ ரம்யா மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு  பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த இரு வாலிபர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, அவர்கள் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியைச் சார்ந்த முருகன் மகன் சர்க்கரை(எ) சக்கரவர்த்தி(23), வாழப்பாடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் வெற்றி(எ) சௌந்தர்ராஜன்(29) என்பது தெரியவந்தது. இருவரும் கம்பி கட்டும் தொழில் செய்த போது நண்பர்களாகி உள்ளனர். பின்னர், டூவீலர் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், ஓமலூர், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சேலம் மாநகர பகுதிகளில் தெருக்கள் மற்றும் வீடுகளின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளனர். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினர். தொடர்ந்து நேற்று காலை இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், கொரோனா பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories:

>