×

கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

கிருஷ்ணகிரி, ஜன.13:சூளகிரி தாலுகா பஸ்தலப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பஸ்தலப்பள்ளி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல் குவாரி இரவு, பகலாக இயங்கி வருகிறது. இங்கு அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்கள் பயன்படுத்தி பாறைகளுக்கு வெடி வைப்பதால் நில அதிர்வு ஏற்பட்டு, சுற்றுவட்டாரத்தில் உள்ள பஸ்தலப்பள்ளி, கிட்டம்பாளையம், பொன்னுநத்தம், சின்னகொத்தூர், முருப்பநாயக்கன்பாளையம், எர்ரண்டப்பள்ளி, சொரக்கானப்பள்ளி, பேடப்பள்ளி, காளிங்காவரம், அக்ரஹாரம், சின்னமட்டம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் நில அதிர்வு ஏற்பட்டு, வீடுகளில் விரிசல் ஏற்படுகிறது. வெடி சத்தத்தால், இரவு நேரத்தில் தூங்க முடியவில்லை. வீட்டின் மீது எப்போது கல் விழுமோ என்ற அச்சத்துடன் உயிருக்கு உத்தரவாதமின்றி வாழ்ந்து வருகிறோம். மேலும், வீடுகளின் மீது கல் விழுந்து ஆடு, மாடுகள் உயிரிழந்துள்ளது. எனவே, கல்குவாரி நிறுவனத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

70 ஆண்டுகளாக வசிப்போருக்கு பட்டா: தேன்கனிக்கோட்டை தாலுகா கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்:கோட்டையூர் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனு அளித்து வருகிறோம். கடந்த 1985ம் ஆண்டு 30 குடும்பங்களுக்கு பட்டா வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், எங்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கிய நிலத்தில் குடியிருந்தவர் ஆட்சேபனை தெரிவித்ததால் பட்டா வழங்கவில்லை. பின்னர் 30 நாட்களில் ஆட்சேபனையின்றி நிலத்தை அவர் வழங்கிவிட்டார். இதையடுத்து, நில அளவையர்கள் அந்த இடத்தை பார்வையிட்டு நிலத்தை அளந்து அதிகாரிகளுக்கு விவரம் தெரிவித்தும் இதுவரை பட்டா வழங்கவில்லை. இதனால், பல ஆண்டுகளாக குடியிருக்க வீடுகள் இன்றி தவித்து வருகிறோம். எனவே, மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

துப்புரவு பணியாளர் கள் மனு:  போச்சம்பள்ளி தாலுகா பாரூர் செல்லக்குட்டப்பட்டியைச் சேர்ந்த பகுதி நேர துப்புரவு பணியாளர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் தற்காலிகமாக 71 பேர் துப்புரவு பணியாளர்களாக கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இதனால், எங்களுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதில்லை. குறைந்த ஊதியத்தை கொண்டு குடும்பம் நடத்துவது சிரமமாக உள்ளது. பணி நிரந்தம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Collector ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...