×

போலி ஆவணம் கொடுத்து கட்சியை அபகரிக்க முயற்சி; அன்புமணி மீது டெல்லி போலீசில் புகார்: சிபிஐ-யிடமும் ராமதாஸ் தரப்பு முறையீடு

புதுடெல்லி: போலி ஆவணம் கொடுத்து கட்சியை அபகரிக்க முயன்றதாக அன்புமணி ராமதாஸ் மீது டெல்லி காவல்துறையில் ராமதாஸ் தரப்பினர் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனான அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. கட்சியை அபகரிக்கும் நோக்கில் அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ததாக ராமதாஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மினி புஷ்கர்னா, ‘அங்கீகரிக்கப்படாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது;

இதுதொடர்பாக சிவில் நீதிமன்றத்தை அணுகலாம்’ என்று கூறி வழக்கை முடித்து வைத்தார். இதனிடையே, ‘கட்சியில் இதே குழப்ப நிலை நீடித்தால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்க நேரிடும்’ என தலைமை தலைமைத் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பைச் சேர்ந்த அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, டெல்லி நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘பாமக பொதுக்குழு நடைபெற்றதாகக் கூறி போலியான ஆவணங்களை அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்; எனவே இந்த மோசடி தொடர்பாக அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் இதுமட்டுமின்றி சிபிஐ இயக்குனரையும் நேரில் சந்தித்த ஜி.கே.மணி, போலி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக அன்புமணி மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனப் புகார் மனு அளித்துள்ளதால், பாமக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Delhi Police ,Anbumani ,CPI ,Yidum ,Ramadas ,New Delhi ,Ramdas ,Anbumani Ramadas ,Batali People's Party ,
× RELATED மலையாள நடிகை பலாத்கார வழக்கு; கேரள...