×

மலையாள நடிகை பலாத்கார வழக்கு; கேரள முதல்வர், அதிகாரிகளுக்கு மெசேஜ் அனுப்பிய நடிகர் திலீப்: போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் பரபரப்பு தகவல்

திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட 5வது நாளே, தவறு செய்யாத நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று கூறி நடிகர் திலீப், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் போலீஸ் உயரதிகாரிகளுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய விவரம் விசாரணையில் தெரியவந்ததாக நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் திருச்சூரிலிருந்து காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த ஒரு சில நாட்களிலேயே நடிகையின் முன்னாள் கார் டிரைவரான சுனில்குமார் என்பவர் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியது பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பலாத்கார சம்பவம் நடந்து 5 மாதங்களுக்கு பின்னர் ஜூலை 10ம் தேதி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் திலீப் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து வரும் 8ம் தேதி எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை குறித்து நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் உள்ள சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் தான் மலையாள நடிகை ஒரு கும்பலால் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த பல்சர் சுனில்குமார் என்பவரது தலைமையில் தான் இந்த சம்பவம் நடந்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து சுனில்குமார் உள்பட அந்தக் கும்பலை சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் விசாரணை நடத்திய சில மாதங்களுக்கு பின்னர் தான் இதற்கு சதித்திட்டம் தீட்டியது நடிகர் திலீப் என தெரியவந்தது. ஆனால் சம்பவம் நடந்த 5வது நாளே அதாவது பிப்ரவரி 22ம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் சில உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு நடிகர் திலீப் வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பினார்.

அதில் நடிகை பலாத்கார சம்பவத்தில் தவறு செய்யாத நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில்குமாருக்கும், திலீப்புக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. சுனில்குமார் கைது செய்யப்பட்ட உடன்தான் இந்த மெசேஜை திலீப் அனுப்பினார். இவர் கைது செய்யப்பட்டதால் தன்னை போலீஸ் நெருங்கும் என்று பயந்து தான் இவர் மெசேஜ் அனுப்பி உள்ளார். இவ்வாறு போலீஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Dileep ,Kerala ,Chief Minister ,Thiruvananthapuram ,Pinarayi Vijayan ,
× RELATED போலி ஆவணம் கொடுத்து கட்சியை அபகரிக்க...