₹7.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தர்மபுரி, ஜன.13: பொங்கல் பண்டிகையையொட்டி, தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் நேற்று வாரச்சந்தை கூடியது. தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கடைகள் அமைத்திருந்தனர். இதில், தர்மபுரி, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தொப்பூர், மிட்டாரெட்டிஹள்ளி மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் ஆகிய பகுதியில் இருந்து சுமார் 3500 ஆடுகள் விற்பனைக்கு வந்தது. காணும் பொங்கல் தினத்தில் இறைச்சிக்காக ஆடுகளை வாங்க அதிகாலை முதலே பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். இதில், ஒரு ஆடு ₹10 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. கடந்த வாரத்தை விட நேற்று ஆடுகளின் விலை சுமார் ₹1000 முதல் ₹3ஆயிரம் வரையிலும் விலை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்வால் ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று நல்லம்பள்ளி சந்தையில் சுமார் ₹5 கோடிக்கு ஆடு, மாடு, கோழிகள் விற்பனை நடந்துள்ளது.

காரிமங்கலம்:காரிமங்கலத்தில் நேற்று வாரச்சந்தை கூடியது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடு- கோழிகள் வரத்து அதிகரித்தது. விற்பனையும் சூடுபிடித்தது. 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ₹8,000 முதல் ₹12,000 வரையிலும் விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு ஆடு ₹23 ஆயிரம் வரையிலும் விலைபோனது. நேற்று ஒரேநாளில் 4 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதேபோல், நாட்டு கோழி கிலோ ₹350 முதல் ₹400 வரையிலும் விற்பனையானது. ஆடு- கோழிகளை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். மேலும், பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானை, புது அரிசி, கரும்பு, வெல்லம், மாடுகளுக்கு தேவையான அலங்கார பொருட்கள், கயிறுகளை ஆர்வத்துடன் வாங்கினர்.

காரிமங்கலம் வாரச்சந்தையில் நேற்று ஒரே நாளில், சுமார் ₹2.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>