×

போந்தவாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறுவதால் குளமாக மாறிய 4 வழி சாலை: வாகன ஓட்டிகள் அவதி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, பென்னாலூர்பேட்டை கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இதில், மழைக்காலங்களின் போது அங்குள்ள மலை பகுதிகளில் இருந்து வரும் மழை நீரால் இங்குள்ள ஏரி நிரம்பும். இதன் காரணமாக 1000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து பயன் அடைவார்கள். இந்நிலையில், ஊத்துக்கோட்டை மற்றும் பென்னாலூர் பேட்டை, போந்தவாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் காலை சுமார் 3 மணி நேரம் 9.3 செ.மீ. மழை பெய்தது. இதனால், பென்னாலூர்பேட்டை ஏரி நிரம்பி அந்த தண்ணீர் வயல்களில் புகுந்து போந்தவாக்கம் ஏரிக்கு சென்றது.

இதில், போந்தவாக்கம் ஏரியும் நிரம்பியது. இந்த ஏரி நிரம்பி அதன் உபரி நீர் தற்போது ஊத்துக்கோட்டை முதல் போந்தவாக்கம், பெரிஞ்சேரி வரை ரூ.20 கோடியில் அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையில் போந்தவாக்கம் ரவுண்டானாவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், ஏரியின் உபரி நீரால் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு போந்தவாக்கம் பகுதியில் தூர்வாரப்பட்ட ஏரிக்கால்வாய் சரிவர தூர்வாராததால் போந்தவாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் தண்ணீர் கால்வாயில் செல்லாமல் சாலையில் சென்று பின்னர் கால்வாயில் செல்கிறது என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Bodavakkam Lake ,Pothukota ,Puthukota ,Pennalurbetta ,
× RELATED செகந்திராபாத் – சென்னை இடையே சிறப்பு...