வடிநீர் கால்வாய் அமைக்காமல் உள்ளதால் சாலையில் தேங்கும் மழைநீரால் தொற்றுநோய் அபாயம்: கேளம்பாக்கம் ஊராட்சி மக்கள் அச்சம்

திருப்போரூர்: கேளம்பாக்கம் ஊராட்சியில், வடிநீர் கால்வாய் அமைக்காமல் உள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழைநீர், குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால், பல்வேறு தொற்று நோய் ஏற்படும் என பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால், கேளம்பாக்கம் ஊராட்சியில், ஏராளமான வீட்டுமனை பிரிவுகள் உருவாகி வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால், முறையாக திட்டமிடாமல் குடியிருப்புகள் அமைந்துள்ளது. வடிகால்வாய் மற்றும் கழிவுநீர் கால்வாய் ஆகியவை அமைக்கவில்லை. இதனால், மழைக் காலங்களில் வெள்ளநீர் வடியாமல் சாலைகளில் தேங்கி விடுகிறது.

அதில், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து சாக்கடையாக மாறி, புழுக்கள் உற்பத்தி ஆகின்றன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் கொசு தொல்லையும் அதிகரித்து, பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. கேளம்பாக்கத்தில் மக்கள் தொகை அதிகமாக இருந்தாலும் போதிய வருவாய் இல்லாத நிலையே உள்ளது. தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் சிறப்பு நிதிகள் ஒதுக்கி திட்டங்கள் எதுவும் நிறைவேற்றவில்லை. பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவ்வப்போது பொக்லைன் இயந்திரம் மூலம் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுகின்றனர். ஆனாலும், இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவில்லை. எனவே, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கேளம்பாக்கம் ஊராட்சியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, கொசு மருந்து அடிக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories:

>