பொங்கல் பண்டிகையையொட்டி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் போலீசார் ஆலோசனை: வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்யக்கூடாது என எச்சரிக்கை

மதுராந்தகம்: ஆத்தூர் சுங்கச்சாவடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க, சுங்கச்சாவடி ஊழியர்களுடன், போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, வாகன ஓட்டிகளிடம் தகராறு செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். செங்கல்பட்டு மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி வழியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் செல்வது வழக்கம். அப்போது, சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகன ஓட்டிகள் எவ்வித பிரச்னையும் இன்றி பயணம் செய்யவும் அச்சிறுப்பாக்கம் போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். அப்போது, அனைவரும் வாகன ஓட்டிகளிடம் முகம் சுளிக்க கூடாது.

வாக்குவாதம் செய்ய கூடாது. தவறான வார்த்தைகளை பயன்படுத்தி, அவர்களது பயணத்துக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தக்கூடாது. மக்களின் பயண சேவைக்காகவே, நீங்கள் ஊழியர்களாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். பணியின்போது குடித்துவிட்டோ, சீருடை இல்லாமலோ டிரைவர்களிடம் வாக்குவாதம், சண்டையில் ஈடுபட கூடாது. மீறினால், உங்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் ஈடுபட்டால், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நேரத்தில் சுங்கச்சாவடி நிர்வாகம் அதிகப்படியாக கவுன்டர்களை திறந்து, விரைவாக கட்டணம் வசூல் செய்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க உதவ வேண்டும் என்றனர்.

Related Stories:

>