×

பாதாள சாக்கடை மேனுவல் சரியில்லாததால் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: கண்டுகொள்ளாத பேரூராட்சி அதிகாரிகள்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியில் சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை  அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சியின் 15 வார்டுகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பூஞ்சேரியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் இருந்து பாதாள சாக்கடை மூலம் கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, மாமல்லபுரம் பேரூராட்சி 13வது வார்டு, பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை தெருவில் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி ஆறாக வழிந்தோடுகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை, பேரூரட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில் மாமல்லபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கியபோது சரிவர மேனுவல் மூடிகளை அமைக்கவில்லை. இதனால், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, மேனுவலில் வெளியேறி கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடுகிறது.

இதையொட்டி, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தியாகி, பொதுமக்களுக்கு சிக்குன் குன்யா, மலேரியா, டெங்கு உள்பட பல்வேறு மர்மகாய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும், பேரூராட்சி அதிகாரிகள், மெத்தனமாக உள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, பொதுமக்கள்  நலன்கருதி உடனே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றி, மேனுவல் மூடியை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். முறையாக பணிகளை செய்யதாவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி