மறைமலைநகர் தனியார் தொழிற்சாலையில் ஊழியர்கள் குடும்பத்துடன் விடிய விடிய போராட்டம்: 8 மாதமாக சம்பளம் வழங்காததால் ஆத்திரம்

செங்கல்பட்டு: மறைமலைநகர் பகுதியில் செல்போன் மற்றும் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை பார்க்கின்றனர். இங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த மார்ச் முதல் ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதையறிந்ததும், மறைமலைநகர் போலீசார் நேரில் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினார். அதில், விரைவில் அனைவருக்கும் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. ஆனாலும், இதுவரை முறையாக சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 8 மாதமாக சம்பளம் வழங்காத தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட ஆண், பெண் ஊழியர்கள், தங்களது குழந்தைகளுடன் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தொழிற்சாலை முன்பு திரண்டனர். அங்கு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது போராட்டம், நேற்று அதிகாலை வரை நீடித்தது. தகவலறிந்து வண்டலூர் டிஎஸ்பி ரவிசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து ஊழியர்கள், பாராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டனர்.இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், இந்த தொழிற்சாலையில், கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றுகிறோம். எங்களுக்கு 40 வயதை எட்டி விட்டது. வேறு கம்பெனியில் வேலைக்கு செல்ல முடியாமலும், குழந்தைகளை படிக்க வைக்க முடியாமலும், வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமலும், சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கடும் அவதிப்படுகிறோம். பலமுறை கம்பெனி நிர்வாகத்திடம் கூறிவிட்டோம். பலமுறை போராட்டமும் நடத்திவிட்டோம். இதுவரை சம்பளம் வழங்கவில்லை. நிரந்தர தீர்வு காண, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: