இரணியல் அருகே அடுத்தடுத்து ஒரே நாளில் 3 கோயில்களில் திருட்டு

திங்கள்சந்தை, ஜன.13: இரணியல்  அருகே ஒரே நாள் இரவில் 3 கோயில்களில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து பணம்,  பாத்திரங்கள், பூஜை பொருட்கள் திருடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் சமீப காலமாக திருட்டு, வழிப்பறி,  பெண்களை குறி  வைத்து செயின் பறிப்பது ஆகியவை  அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரணியில் காவல் நிலைய எல்லை பகுதிக்கு உள்பட்ட 3 கோயில்கள் கொள்ளை நடந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு: இரணியல் அருகே ஆளூர்  வீரநாராயணசேரியில் அழகிய விநாயகர்கோயில் உள்ளது. இருதினங்களுக்கு முன் பூஜை  முடிந்து கோயிலை பூட்டி சென்றனர். பின்னர் நேற்றுமுன்தினம் காலை பூசாரி கோயில் நடையை  திறக்க சென்றார். அப்போது கோயிலின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பூஜைக்கான  பொருட்கள், விளக்குகள், பாத்திரங்கள் ஆகியவை திருடப்பட்டு இருந்தது .

இதேபோல் கோயில் உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது.  அதில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதேபோல் அதே பகுதியில் உள்ள  சாஸ்தா கோயில், சுடலை மாடசுவாமி கோயிலிலும் உண்டியல்களை உடைத்து காணிக்கை  பணம், கோயிலில் இருந்த செம்பு, வெண்கல பாத்திரங்கள், பூஜை பொருட்கள்  திருடப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள் குறித்தும் இரணியல் காவல்  நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அடுத்தடுத்து 3 கோயில்களிலும் நடந்த  திருட்டு தொடர்பாக போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

கோயிலில் பதுங்கியிருந்தவர் சிக்கினார்

பேயன்குழி கோயில் அருகே உள்ள சிறிய தெருவில் நேற்று முன்தினம்  நள்ளிரவு   சுமார் 11 மணியளவில் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் பதுங்கி இருந்தார். இதை கவனித்த  பொது மக்கள் உடனே அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது   முன்னுக்கு பின் முரணாக பேசினார். ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரை பிடித்து   சரமாரியாக தாக்கினர். அப்போது கோயிலில் உள்ள பொருட்களை எடுத்து செல்ல   வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து பொது மக்கள் இரணியல் காவல்  நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். பின்னர் பொது மக்கள் பிடியில் இருந்த நபரை  மீட்டனர். பின்னர் அவர் யார்? எதற்காக இங்கு பதுங்கி இருந்தார்.  கோயில் கொள்ளையில் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>