×

குமரி முழுவதும் கனமழை நீடிப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில், ஜன.13:  குமரி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக பொங்கல் பண்டிகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்து இரவு நேரத்தில் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை வியாபாரம் நடைபெற்று வருகிறது. வணிக, வர்த்தக நிறுவனங்களில் வழக்கத்தைவிட வியாபாரம் அதிகம் நடைபெறுவது வழக்கம். ஜவுளி கடைகளிலும் பொங்கல் விற்பனை களைகட்டவில்லை.

ஆனால் ஆனி, ஆடி மாதத்தில் பெய்துவரும் மழை போன்று விடாது பெய்து வரும் மழையால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். கரும்பு, மஞ்சள் போன்றவற்றின் வியாபாரமும் எதிர்பார்த்த அளவிற்கு நடைபெறவில்லை.  பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்றும் கனமழை நீடிக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர். மழை காரணமாகவும், கீழ கோதையாறு அணையில் மறுகால் திறந்துவிடப்பட்டதாலும் நேற்று மாலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 2700 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் 43.90 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழை நீடிக்கும் தருவாயில் 46 அடிக்கு பின்னர் வரும் தண்ணீர் உபரியாக திறந்துவிட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை போன்று பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 2800 கன அடி தண்ணீர் வரத்து காணப்படுகிறது. மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 26.2 மி.மீ மழை பெய்திருந்தது. சிற்றார்-1ல் 14.4, பெருஞ்சாணியில் 4.8, புத்தன் அணையில் 5.4, சுருளோடு 7.2 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது. மேலும் முக்கடல், ஆனைக்கிடங்கு, முள்ளங்கினாவிளை, அடையாமடை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்திருந்தது.

Tags : Kumari ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து