×

தோட்டக்கலை பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்

மணப்பாறை, ஜன. 13: மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள அதிகாரம், சடவேலாம்பட்டி, கரடிபட்டி, அம்மாபட்டி, செட்டியப்பட்டி, வலையப்பட்டி, நாட்டார்பட்டி, பிடாரப்பட்டி, கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நெற்பயிர், கடலை, உளுந்து அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் நெற்பயிர் மட்டுமின்றி உளுந்து, பருத்தி, கடலை மற்றும் பூச்செடிகள் நீரில் மூழ்கி அழுக துவங்கியுள்ளது. ஆனால் வருவாய்த்துறை, வேளாண்துறை இணைந்து சேதமடைந்த நெற்பயிர்களை மட்டுமே கணக்கெடுத்து வருகின்றனர். மானாவாரி பயிர்களின் சேதத்தை கணக்கெடுக்கவில்லை. எனவே சேதமடைந்த கடலை, உளுந்து உட்பட தோட்டக்கலை பயிர்களையும் கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்தி அழுகிய பூச்செடிகள், கடலை மற்றும் உளுந்து பயிர்களுடன் மருங்காபுரி தோட்டக்கலைத்துறை அலுவலகம் முன் கொட்டும் மழையில் திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் கிடைத்ததும் மருங்காபுரி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags :
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு