திருப்போரூர், டிச.6: திருப்போரூர் ஒன்றியத்தில் கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டதால், தற்போது பெய்த மழையின் காரணமாக கொண்டங்கி ஏரி நிரம்பி வழிவதால், அரசின் நடவடிக்கைக்கு, விவசாயிகள் பாராட்டி உள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் தையூர், கொண்டங்கி, சிறுதாவூர், மானாம்பதி ஆகிய கிராமங்களில் பெரிய ஏரிகள் உள்ளன. கடந்த 1 வாரமாக பெய்த கனமழையின் காரணமாக, அனைத்து ஏரிகளும் நிரம்பி வருகின்றன. தையூர் ஏரி நிரம்பி அருவிபோல் கொட்டி வரும் நிலையில், திருப்போரூரில் இருந்து சிங்கபெருமாள் கோயில் செல்லும் வழியில் உள்ள கொண்டங்கி ஏரியும் நிரம்பி வழிகிறது. இதனால் திருப்போரூர், செங்கல்பட்டு, மறைமலைநகர், சிங்கபெருமாள் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து கொண்டங்கி ஏரியில் இருந்து கலங்கல் வழியாக நீர் வெளியேறுவதை பார்த்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு மாவட்ட விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில், கொண்டங்கி ஏரியின் நீர் வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, கால்வாய்களை தூர் வாரியதால் இந்த ஆண்டு நீர் நிரம்பி இருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஏரி நீர் பாசன பயன்படுத்துவோர் சங்க தலைவர் கெஜராஜன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஏரியில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் கால்வாய்களில் 60 சதவீதம் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு விட்டதாகவும், மீதி உள்ள 40 சதவீத கால்வாய்களையும் இந்த ஆண்டு தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கொண்டங்கி ஏரியில் இருந்து கொண்டங்கி, நந்தம்பாக்கம், மேலையூர், அகரம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட 7 கிராம விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
