திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் சாய்ந்து, நீரில் மூழ்கிய 90 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்

திருவாரூர், ஜன.13:  திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பெய்த தொடர் மழையால் 90 ஆயிரம் ஏக்கர் அளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களுக்கும் மேலாக அடை மழை பெய்து வருகிறது. இதனையொட்டி மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராகியுள்ள நெற் பயிர்கள் நீரில் சாய்ந்துள்ள நிலையில் நேற்று திருவாரூர் தாலுகாவிற்குட்பட்ட பெருந்தரக்குடி, கூடூர், பாலையூர் மற்றும் திருத்துறைப்பூண்டி தாலுகாவிற்குட்பட்ட கச்சனம், திருத்துறைப்பூண்டி, கள்ளிக்குடி, கீழபாண்டி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் அதனை கலெக்டர் சாந்தா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையிலிருந்த 90 ஆயிரத்து 532 ஏக்கர் பரப்பளவு சாகுபடி நெற்பயிர்கள் சாய்ந்து, மழைநீரில் முழ்கிய நிலையில் உள்ளது. மேலும், இதுபோன்ற நிலையிலுள்ள நெற்பயிர் பரப்புகள் வேளாண் துறையினர் மூலமாக கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டு தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இது போன்று மழைநீர் தேங்கியுள்ள வயல்களிலிருந்து மழைநீரினை உடனடியாக வெளியேற்ற வேளாண் துறை அலுவலர்கள் மூலம் விவசாயிகளிடம் எடுத்துரைத்து அவர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்கிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வேளாண் துறையினரின் அறிவுரைகளை விவசாயிகள் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். ஆய்வின்போது வேளாண் துணை இயக்குநர் உத்திராபதி, உதவி இயக்குனர் ஹேமாஹெப்சிபாநிர்மலா, துணை வேளாண் அலுவலர் காத்தையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>