பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி, ஜன.13: திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் தெரிவித்துள்ளதாவது: உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் தைத்திருநாள் பொங்கல் அன்று பாரம்பரிய அரிசியின் மூலம் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும். அதிக எதிர்ப்பு சக்தியும் மருத்துவ குணங்களும் உடைய கருப்பு கவுனி, பூங்கார், குள்ளகார், சிவப்பு கவனி, ஆத்தூர் கிச்சடி போன்ற அரிசியை கொண்டு பயன்படுத்தும்போது தமிழர்களின் பாரம்பரிய முறையில் பொங்கல் திருநாளை கொண்டாட முடியும். மேலும் நஞ்சில்லாத உணவை நுகர்வோர்களுக்கு வழங்க இயற்கை விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். இந்த முயற்சியை ஊக்கமளிக்கும் வகையில் அவர்களிடம் அரிசியை வாங்கி பொங்கல் வைப்பதினால் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்த விவசாயிகளின் அரிசிக்கும் உரிய விலை கிடைத்து அவர்களும் இனிய பொங்கல் திருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். பொதுவாக தைப்பொங்கல் தினத்தன்று புத்தரிசி கொண்டு பொங்கல் வைப்பது தமிழர்களின் வழக்கம் ஆகும். ஆனால், தற்போது அந்த பாரம்பரியத்தை மறந்து பை அரிசி வாங்கி வந்து பொங்கல் வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பாரம்பரியத்தை காக்கவும் நமது அடுத்த தலைமுறையினருக்கு நஞ்சில்லாத உணவை வழங்கவும், பாரம்பரிய அரிசியில் பொங்கல் வைத்து கொண்டாட வேண்டுகோள் விடுக்கிறோம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>