புதுகையில் மழையால் அழுகும் நெற்கதிர்கள் இந்தாண்டு கசப்பான பொங்கல் என விவசாயிகள் வேதனை

புதுக்கோட்டை,ஜன.13: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து விடிய விடிய பெய்து வரும் அறுவடை செய்வதற்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கியதால் இந்தாண்டு இனிப்பு பொங்கல் இழப்புடன் கூடிய கசப்பான பொங்கலாக மாறிவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவ ட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வறட்சி மட்டுமே இருந்து வந்தது. இதனால் ஏரி, குளங்களில் தண்ணீர் இன்றி வறண்டுபோய் இருந்தது. இதனால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி நகர் பகுதிகளுக்கு கூலி தொழில் செய்ய சென்றனர். இந்நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு பிற்பகுதியில் தொடர்ந்து நல்ல மழை பெய்யத்தொடங்கியது. இதனால் ஏரி குளங்களில் தண்ணீர் நிரம்ப தொடங்கியது. இதனை கொண்டு விவசாயிகள் அனைத்து வயல்களையும் நடவுசெய்தனர்.

இதனால் பார்க்கும் வயல்வெளிகள் அனைத்தும் பசுமையாக காணப்பப்ட்டது. இந்தாண்டு விவசாயிகள் பொங்கலுக்கு முன் அறுவடை செய்து விற்பனை செய்துவிட்டு பொங்கலை விமர்சையாக கொண்டாட நினைத்து அதற்காக கடன்களை வாங்கி முன்னேற்பாட்டு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விட்டு விட்டு விடியவிடிய மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்த மழையின் காரணமாக அனைத்து வயல்களிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் சாய்ந்த நெற்கதிர்கள் தண்ணீரில் நனைந்து ஊறி அழுகும் நிலையில் உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: எப்போதும் தை முதல் நாள் பொங்கல் விழா சிறப்பாக வீடுகளில் கொண்டாடுவோம். நெல்லை அறுவடை செய்து அதனை விற்பனை செய்து கடன்களை அடைத்துவிட்டு மீதம் இருக்கும் பணத்தை கொண்டு யாருக்கும் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதால் கவலையின்றி நாங்கள் பொங்கல் கொண்டாடுவோம். இதனால் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து தற்போது பெய்த மழையின் காரணமாக நெல் பயிர்கள் கதிர் முற்றிலும் அறுவடைக்குத் தயாரான நிலையில், மழை பெய்ததால் தண்ணீரில் கதிர்கள் மூழ்கிவிட்டன. இதனால், வேதனையும், கவலைகளும் நிறைந்த கசப்பான பொங்கலாக இருக்கும். நெல் சேதங்களை முறையாக கணக்கெடுத்து அதற்கு ஏற்றார்போல் இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும். தற்போதே வருவாய்துறையினர் தகுந்த ஆயத்த பணிகளை தொடங்க வேண்டும் என்றார்.

மார்கழி மழை மண்ணுக்கு உகந்தது இல்லை

எந்த மாதத்தில் மழை பெய்தாலும் விவசாயத்திற்கு பயன்பெறும். ஆனால் மார்கழி மழை பெய்தால் கண்டிப்பாக மழை முற்றிலும் அறுவடை கதிர்கள் நனைந்து வீனாகிவிடும். இதனால்தான் மார்கழி மாதம் மழை மண்ணுக்கு உதவாது என்று முன்னோர்கள் சொல்வார்கள். இந்த சொல் தற்போது பெய்து வரும் மழையால் அழுகும் நெல்களை பார்க்கும்போது உண்மை என நிரூபணமாகிறது.

Related Stories: