கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனை மேற்கொள்ளும் ஸ்கேன் மையம் மீது கடும் நடவடிக்கை அரியலூர் கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர், ஜன.13: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பேசுகையில், மகப்பேறு மருத்துவர்கள் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பது தெரிவிப்பது சட்டப்படி குற்றமாகும். ஸ்கேன் மையங்களை முறையாக நடத்தியும், பதிவேடுகள் முறையாக பராமரித்து புதுப்பிக்க வேண்டும். கருவில் வளரும் குழந்தை பாலினம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் ஸ்கேன் மையங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இம்மையங்களை இணைய வழியாக ஒன்று சேர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். தொடர்ந்து, 2 பெண் குழந்தைகளை பெற்ற 123 தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில், இணை இயக்குநர்கள் திருமால், இளவரசன், துணை இயக்குநர் ஹேமசந்த்காந்தி, மகப்பேறு மருத்துவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: