நாகை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை

நாகை,ஜன.13: நாகை மாவட்டத்தில் பலத்த சூறைகாற்றுடன் விடிய, விடிய பெய்த மழையால் வேளாங்கண்ணி பஸ்ஸ்டாண்ட் அருகே இருந்த 15 கடைகள் சேதமடைந்தது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்திலும் அவ்வப்பொழுது மழை பெய்து வந்தது. நாகை மாவட்டத்தில் நேற்று முன்தினம் (11ம் தேதி) மதியம் 11 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நீடித்து கனமழையாக மாறி பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழை நேற்று (12ம் தேதி) அதிகாலை 6 மணி வரை நீடித்தது. தொடர்ந்து பெய்த மழையால் நாகை மாவட்டத்தில் ஒரத்தூர், புதுச்சேரி, கீழ்வேளூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் வயல்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. மழையுடன் காற்றும் சேர்ந்து வீசியது.

இதனால் வேளாங்கண்ணி பஸ்ஸ்டாண்ட் அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் பெயர்ந்து விழுந்தது. அதே போல் அப்பகுதியில் இருந்த பேன்சி ஸ்டோர்ஸ், பொரி மற்றும் கடலை வியாபாரம் செய்யும் கடைகளின் மேல் கூரை காற்றில் பறந்து சென்றது. இதனால் கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் மழை நீரில் நனைத்து சேதமடைந்தது. மழையுடன் காற்றும் சேர்ந்து வீசியதால் நாகை அருகே கீச்சாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இந்த வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் உயிர்சேதம் ஏற்படவில்லை. அதே போல் கீச்சாங்குப்பம் பகுதியில் மின்சாரஒயர்கள் அறுந்து விழுந்தது. இதில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தது. தொடர் மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி வாகன ஓட்டிகளை அவதி அடைய செய்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா கரியாப்பட்டினம், வடமழை மணக்காடு, மூலக்கரை, பிராந்தியங்கரை, ஆயக்காரன்புலம், வாய்மேடு, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஹெக்டரில் சம்பா சாகுபடி பயிர் செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 8மணி முதல் நேற்று காலை 8 மணிவரை 18 சென்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி முற்றிலும் நீரில் மூழ்கியுள்ளது. இதனை அறுவடை செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதாக விவாசாயிகள் தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கு பகுதியில் திடீரென மழையுடன் சூறைக்காற்று வீசியது, இதனால் அப்பகுதியில் உள்ள ஏழு வீடுகள் சேதமடைந்தது. மேலும் அப்பகுதியில் 5 மின் கம்பங்களும் மரங்களும் முறிந்து விழுந்தன.

இது குறித்து வருவாய் துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர், கனமழையின் காரணமாக வேதாரண்யம் தாலுகாவில் சுமார் 10,000 மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. தங்கள் படகுகளை பாதுகாப்பாக கரை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று பெய்த கனமழையால் வேதாரண்யம் நகராட்சி பகுதி திருத்துறைப்பூண்டி சாலையில் மழை நீர் தேங்கியது, இதே போல் குரவப்புலம், தோப்புத்துறை உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. கரியாப்பட்டினம்- செட்டிப்புலம் மனக்காட்டன் வாய்க்கால் தரைபாலத்திற்கு மேல் 2 அடி அளவிற்கு தண்ணீர் ஓடுகிறது, இதனால் அப்பகுதியில் செல்லும் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

Related Stories:

>