வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர்

வேதாரண்யம்,ஜன.13: வேதாரண்யம் அருகே கடல் சீற்றத்தில் சிக்கிய 4 மீனவர்கள் கரை திரும்பினர். நாகை மாவட்டம் வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் (49), ஜெயமூர்த்தி (46) , பவித்திரன் (28), நவீன் (22) ஆகிய நான்கு மீனவர்களும் ஜெயக்குமாருக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 10ம் தேதி மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்துக்கொண்டு 11ம் தேதி காலை கரை திரும்ப வேண்டும். ஆனால் அவர்கள் குறிப்பிட்டபடி கரை சேராததால் குடும்பத்தினர், உறவினர்கள், பஞ்சாயத்தார் ஆகியோர் என்ன செய்வதென்று புரியாமல் பரிதவித்தனர். கடும் கடல் சீற்றத்தால் வேறு படகில் சென்று தேடவும் முடியவில்லை. இதுகுறித்து வேதாரண்யம் மீன்வளத்துறை ஆய்வாளர் நடேச ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர். அவரும் உயர் அதிகாரிகள் மூலம் கப்பற்படை ரோந்து கப்பலுக்கும் தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் மீனவர்கள் கடும் கடல் சீற்றத்தை சமாளித்து ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் உள்ள உப்பனாறு ஆற்றிற்கு நேற்று பத்திரமாக கரை வந்து சேர்ந்தனர்.

Related Stories:

>