போலி டாக்டர் 10 ஆண்டுகளாக நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்'நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது அம்பலம் ஒடுகத்தூரில் அதிகாரிகள் அதிரடி

ஒடுகத்தூர், ஜன.13: ஒடுகத்தூரில் 10 ஆண்டுகளாக போலி டாக்டர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் கிடங்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் ஒடுகத்தூரில் கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையும், பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். ஆனால் ரமேஷ் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்து வந்தார்.

இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் அறிவுறுத்தலின்படி, ஒடுகத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சீனிவாசன், தாசில்தார் சரவணமூர்த்தி மற்றும் வேப்பங்குப்பம் போலீசார் நேற்று முன்தினம் ரமேஷ் கிளினிக்கிற்கு சென்றனர். ஆனால் அதிகாரிகள் வருவதை தெரிந்துகொண்ட ரமேஷ் அங்கிருந்து தப்பிச்சென்றார்.

அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ரமேஷ் 12ம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ரமேஷை தேடி வருகின்றனர்.

Related Stories:

>