தொடர் மழை காரணமாக ஆறுமுகநேரி பகுதியில் 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் கவலை

ஆறுமுகநேரி, ஜன.13: ஆறுமுகநேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், மூலக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஜனவரி மாத தொடக்கத்தில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பிசான சாகுபடியாக விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 களை எடுத்தல், மருந்து தெளித்தல், உரமிடுதல், போன்ற பணிகள் நடைபெறவில்லை. மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரும்பாலான இடங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டதால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து ஆறுமுகநேரியைச் சேர்ந்த விவசாயி மூக்காண்டி என்பவர் கூறுகையில், பிசான சாகுபடியாக நெல் பயிரிட்டுள்ளோம்.

தற்போது புயல் சின்னம் காரணமாக  கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல் பகுதியில் தண்ணீர் தேங்கி நெல் பயிர்கள் நீரில் மூழ்கிவிட்டது. இதுபோல் நாற்றுகளும் மூழ்கி விட்டதால் கடன் வாங்கி செலவு செய்தது வீணாகி விட்டது. எனவே விவசாய பணிகளை மீண்டும் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக பாதிக்கப்பட்ட நெல் பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.

Related Stories:

>