9 மாதங்களுக்கு பிறகு களக்காடு தலையணை இன்று திறப்பு

களக்காடு, ஜன. 13:  களக்காடு தலையணை 9 மாதங்களுக்கு பிறகு கடும் நிபந்தனைகளுடன் இன்று திறக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பக பகுதியில் இயற்கை எழிலுடன் சுற்றுலா  மையமான தலையணை அமைந்துள்ளது. இங்கு மூலிகைகளை தழுவியபடி ஓடும் தண்ணீரில் குளுமை அதிகம் என்பதால் சுற்றுலா பயணிகள் இங்கு குளிக்க தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கானோர் தலையணை நீரோடையில் வந்து குளித்து செல்கின்றனர்.

 இதனிடையே கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து கடந்த மார்ச் இறுதிவாரத்தில் களக்காடு தலையணை மூடப்பட்டதோடு சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.  கடந்த 9 மாதங்களாக திறக்கப்படாதநிலையில், காணும் பொங்கல் பண்டிகைக்காவது தலையணையை திறக்கவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுநல அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினருடன் ஆலோசனை நடத்திய களக்காடு புலிகள் காப்பக இயக்குநர் அன்பு, பல்வேறு நிபந்தனைகளுடன் தலையணை இன்று (13ம் தேதி) முதல் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். குறிப்பாக சுற்றுலா வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதோடு சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கிருமிநாசினியை உபயோகப்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட மது பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுசெல்ல கூடாது.

நுழைவுக்கட்டணம் செலுத்தும் போது சரியான சில்லறை கொடுக்க வேண்டும். வயது சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். உணவுப்பொருட்களையும், தேவையற்ற பொருட்களையும் கொண்டுவரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மேலும் கொரோனா நோய் தொற்றைத் தடுக்க 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், 10 வயதுக்கு உட்பட்டவர்களும், கர்ப்பிணிகளும் தலையணை வருவதை தவிர்க்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் தலையணைக்கு வருவோர் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்தபிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் 9 மாதங்களுக்கு பிறகு பொங்கல் விடுமுறைக்காக தலையணை இன்று திறக்கப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நுழைவு கட்டணம்

நுழைவு கட்டணமாக தலா ரூ.40, சிறுவர்களுக்கு தலா ரூ.20, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, கார்களுக்கு ரூ.50, வேன்களுக்கு ரூ.100, பைக்குகளுக்கு ரூ. 20, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராகளுக்கு ரூ. 100 வீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் வனத்துறை அறிவித்துள்ளது.

பக்தர்களுக்கு நிபந்தனை

இதனிடையே களக்காடு அடுத்த திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலுக்கு செல்லவும் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் செல்ல அனுமதி கிடையாது. ஆனால், மற்ற நாட்களான செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது

Related Stories: