கடையம் பகுதி ஆறுகளில் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை

கடையம், ஜன. 13:  கடையம் பகுதி ஆறுகளில் உயிர்ப்பலிகளை தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும்  என பூங்கோதை எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.  தென்காசி மாவட்டம், கடையம் அருகே ஏபிநாடானூரை சேர்ந்த அபிநயா (18) கடந்த 6ம்தேதி பாப்பான்குளம் கடனா ஆற்றில் குளிக்கச்சென்ற போது வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார். இதே போல் கடந்த 9ம் தேதி கீழ ஆம்பூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் (27) என்ற வாலிபர் கிழ ஆம்பூர் கடனா ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் மூழ்கினார். இதையடுத்து 3 நாட்களாக தேடிய தீயணைப்பு வீரர்களால், அவரது உடலை சடலமாகத்தான் மீட்க முடிந்தது. தகவலறிந்த பூங்கோதை எம்எல்ஏ, ஆற்றில் குளித்த போது நீரில் மூழ்கி இறந்த அபிநயா, ஆனந்தராஜ் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறுகையில்,‘‘ஆற்றில் பலியான இருவரது உயிரிழப்பும் என்னை பெரிதும் பாதித்துள்ளது.  ராமநதி , கடனா நதி ஆறுகளில் அபாயகரமான ஆழமான பகுதிகளை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க தவறியது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு ஆற்றுநீரில் மூழ்குவோரை துரிதமாக மீட்க ஏதுவாக  தீயணைப்புத் துறையினருக்கு அதி நவீன கருவிகள், முறையான பயிற்சி வழங்க வேண்டும். அத்துடன் ஆற்றங்கரைபகுதிகளில்  அபாயகரமான பகுதிகளை கண்டறிந்து அங்கு  எச்சரிக்கை அறிவிப்பு பதாகைகள் அமைத்து உயிர் பலி ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அப்போது கிளைச் செயலாளர் மாரிசுப்பு, பிரதிநிதி ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>