பொங்கல் பண்டிகையொட்டி செடியுடன் கூடிய மஞ்சள் அறுவடை தீவிரம்

திருவண்ணாமலை, ஜன.12: பொங்கல் திருநாளை முன்னிட்டு, செடியுடன் கூடிய மஞ்சள் விற்பனைக்கான அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, கரும்பையும், மஞ்சளையும் இறைவனுக்கும், இயற்கைக்கும் படையலிட்டு வழிபடுவது தமிழர்களின் மரபு. எனவே, பொங்கல் பண்டிகையில் கரும்பும், மஞ்சளும் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. அதனால், செங்கரும்பும், இலையுடன் கூடிய மஞ்சள் கிழங்கும் ஆமோகமாக பொங்கல் திருநாளில் விற்பனையாவது வழக்கம். கொரானா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்ந்திருப்பதால், பொங்கல் பண்டிகை பொருட்கள் வழக்கம் போல நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டுள்ள படவேடு, சாமந்திபுரம், கண்ணமங்கலம், காளசமுத்திரம், கம்மசமுத்திரம், வாழியூர், ரெட்டிப்பாளையம், காஞ்சி, கடலாடி, கொளக்குடி, சு.வாளவெட்டி, மேல்செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மஞ்சள் அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, செடியுடன் கூடிய மஞ்சள் கிழங்கு விற்பனையின் மூலம், ஓரளவு லாபம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர். அதையொட்டி, பொங்கல் விற்பனைக்காக மஞ்சள் அறுவடை கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.

திருவண்ணாமலை அடுத்த கொளக்குடி கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மஞ்சள், கர்நாடக மாநிலத்துக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. பெங்களூருவில் வாழும் தமிழர்கள், பாரம்பரிய முறைப்படி பொங்கல் கொண்டாடுவதால், கரும்பு மற்றும் மஞ்சள் விற்பனை அங்கு குறிப்பிடத்தக்க அளவில் நடைபெறுவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். ஒரு மஞ்சள் செடி 5 என்ற விலையில், 20 செடிகள் கொண்ட ஒரு கட்டு ₹100க்கு விளை நிலத்தில் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. இலை கருகல், பூச்சி தாக்குதல் குறைந்திருப்பதால், இந்த ஆண்டு மஞ்சள் செடி செழித்து காணப்படுகிறது.

Related Stories: