தொடர் மழையால் பயிர்கள் சேதம் நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

தூத்துக்குடி,ஜன.12: விளாத்திகுளம், எட்டயபுரம் பகுதிகளில் மழையால் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிடக்கோரி விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. பருவம் தவறிய இந்த தொடர் மழையால் மாவட்டத்தில் மானாவாரி சாகுபடி மற்றும் உப்பளத்தொழில் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், எட்டயபுரம் மற்றும் விளாத்திக்குளம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று மழையால் சேதமான அழுகிய பயிர்களுடன் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் விவசாயிகள் தனித்தனியாக கலெக்டரிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனு: விளாத்திகுளம் ஆற்றங்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட ஓ.துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், அ.கந்தசாமிபுரம், தொப்பம்பட்டி, கல்குமி, ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சுமார் 800ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து, பாசிப்பயிறு, மக்காச்சோளம், மிளகாய், வெங்காயம் போன்ற பயிர்கள் அழுகி சேதம் அடைந்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.  இதுபோன்று எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட வேடப்பட்டி பகுதி விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில், ‘பேரிலோவன்பட்டி, மேலநம்பிபுரம், அயன்வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மானாவாரி பயிர்கள் தொடர் மழையால் அழுகி சேதமாகியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளான எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவேண்டும்’ என்று அதில் கூறியுள்ளனர்.

Related Stories: