அதிகாரிகள் அலட்சியத்தால் விளைநிலங்களில் புகுந்த வெள்ளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் விவசாயிகள் வேதனை

நாங்குநேரி, ஜன. 12: நாங்குநேரி அருகே பாசனக் கால்வாயை அதிகாரிகள் தூர்வாராதால் விளைநிலங்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையில் தவிக்கின்றனர்.

 நெல்லை மாவட்டம், நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாங்குநேரியான் கால்வாயில் ஏராளமான தண்ணீர் பெரிய குளத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரியகுளம் நிரம்பியதால் உபரி மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியகுளத்தில் உள்ள மாலையிட்டான் மதகு திறக்கப்பட்டு வெளியேற்றப்படும் உபரி நீர் அங்குள்ள கால்வாய் வழியாக பம்பன்குளம் இளையனேரிகுளம் ஆழ்வார்குளம்  பட்டர் புரம்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் இந்த கால்வாய் முறையாக பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் பெரியகுளம் செட்டி மடை வாய்க்கால் பாசனத்திற்கு உட்பட்ட சுமார் 100 ஏக்கருக்கும் மேல் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு கிசான் மகாசபை நாங்குநேரி பகுதி தலைவர் விவசாயி வைகுண்டராஜன் கூறுகையில், ‘‘மாலையிட்டான் மதகு உபரி நீர் கால்வாய் பல்லாண்டுகளாக தூர்வாரப்படவில்லை.

இதனால் கரைகள் பலமிழந்தது. அத்துடன் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட உடைப்பும் சீரமைக்கப்படவில்லை. இதனால் அதன்வழியே மதகில் இருந்து வெளியேறிய உபரி நீர் விளைநிலங்களில் புகுந்தது. இதனால் மழைநீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. குறிப்பாக ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது  ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு உபரி நீர் கால்வாய் உடைந்து நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.  அதனைத் தொடர்ந்து விவசாய சங்கத்தின் சார்பில் பொதுப்பணித் துறையிடம் புகார் அளித்தும் பலனில்லை. இதனால் ஆண்டுதோறும் நாங்குநேரி பெரியகுளம் செட்டிமடை பாசன விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகும் அவலம் தொடர்கிறது. இதே போல் தற்போது அதிகாரிகளின் அலட்சியத்தால்  நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம்  வழங்க வேண்டும். அத்துடன் சிதிலமடைந்துள்ள கால்வாயை துரிதமாக சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: