கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி கடையத்தில் இளம்பெண் தர்ணா போலீசார் சமரசம்

கடையம், ஜன. 12: புளியங்குடி நகரத்தைச் சேர்ந்த செல்வராஜ்பாண்டியன் மகள் சுகந்தி (24). பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கும், கடையம் அடுத்த ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த ராஜகோபால் மகன் டேவிட்ராஜாவு (28) என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. டிப்ளமோ முடித்துள்ள டேவிட்ராஜா  சென்னையில் வேலை பார்த்து வருகிறார். திருமணத்தை அடுத்து 3 மாதங்கள் சென்னையில் குடும்பம் நடத்திவந்த தம்பதியருக்கு கருத்து வேறுபாட்டால் தகராறு ஏற்பட்டது.

 இதன்காரணமாக கணவரை பிரிந்த சுகந்தி, தாய் வீடான புளியங்குடி திரும்பினார். இதே போல் கொரோனா ஊரடங்கால் கடந்த ஏப்ரலில் ஊர் திரும்பிய டேவிட்ராஜா, விவாகரத்து கோரி நெல்லை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இருப்பினும் கடந்த சில மாதங்களாக இருவரும் செல்போனில் பேசிக்கொண்டனராம். இதையடுத்து சேர்ந்து வாழ விரும்பிய சுகந்தி தனது விருப்பத்தை கணவருடன் கூறினார்.  

ஆனால், அதை அவர் ஏற்க மறுத்தார். இதனால் ஆவேசமடைந்த சுகந்தி தனது உறவினர்களுடன், நேற்று முன்தினம் கணவர் டேவிட்ராஜா வீட்டுமுன் திரண்டு வந்தார். பின்னர் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி தர்ணா போராட்டம் நடத்தினார். தகவலறிந்து விரைந்துவந்த கடையம்  ஏட்டுக்கள் ஆனந்தராஜ், குமார் மற்றும் போலீசார்,  சுகந்தி மற்றும் உறவினர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.   மேலும் ‘‘கோர்ட்டில் வழக்கு இருப்பதால் நாங்கள் தலையிட முடியாது. குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணை நடக்கும்போது அங்கு உங்களுக்கு கணவருடன் சேர்ந்து வாழ விருப்பம் உள்ளதாக தெரிவியுங்கள். அவர்கள் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுத்து சேர்த்து வைக்க முயற்சி செய்வார்கள்’’ என்றனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் தர்ணாவை கைவிட்டு கலைந்துச் சென்றனர்.

Related Stories: