வீட்டின் கதவை உடைத்து துணிகரம் மருந்து கம்பெனி அதிகாரியை தாக்கி 20 பவுன் கொள்ளை வாழப்பாடியில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

வாழப்பாடி, ஜன.12: வாழப்பாடி அருகே வீட்டின், கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையர்கள், மருந்து கம்பெனி உதவி மேலாளரை இரும்பு ராடால் தாக்கி 20 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இக்கொள்ளையில் ஈடுபட்ட 10 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதுப்பாளையம் தாலுகா அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர் சந்திரசேகர் (35). மருந்து கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றுகிறார். இவர் தனது தாய், மனைவி, 2 மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டுள்ளது. சிறிது நேரத்தில் திடீரென கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்கவே அனைவரும் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது, கதவை உடைத்துக்கொண்டு 10க்கும் மேற்பட்ட முகமூடி கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்தனர். அவர்கள், சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினரை கல்லால் தாக்கி கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.

திடீரென முகமூடி கொள்ளையர்கள், தாங்கள் வைத்திருந்த இரும்பு ராடால் சந்திரசேகரை தாக்கினர். தொடர்ந்து, குடும்பத்தினரை மிரட்டி வீட்டில் இருந்த 20 பவுன் நகை, ₹5 ஆயிரம் பணம், செல்போனை கொள்ளையடித்தனர். பின்னர், சந்திரசேகர் மற்றும் குடும்பத்தினரை அறைக்குள் தள்ளி வெளியே கதவின் தாழ்பாளை கயிறு மூலம் கட்டி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து சந்திரசேகர் செல்போன் மூலம் வாழப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதன்பேரில் டிஎஸ்பி வேலுமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இக்கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அனைத்து மாவட்ட போலீசாருக்கும் இக்கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் தப்பிய 10 பேரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>