ஆட்டையாம்பட்டி அருகே பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது

ஆட்டையாம்பட்டி, ஜன.12:  திருப்பூர் மாவட்டம் கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (35), அதே பகுதி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி ( 31). நண்பர்களான இருவரும், கடந்த 5.11.2019ம் ஆண்டு திருப்பத்தூரிலிருந்து திருப்பூருக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். அரியானூர் அடுத்து தனியார் மருத்துவ கல்லூரி அருகே செல்லும் பொழுது, முன்னால் அதே மருத்துவமனையில் பணிபுரியும் சித்ரா (40) என்பவர் டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் அருகில் சென்று கீழே 100 ரூபாய் நோட்டு விழுந்துள்ளது என கவனத்தைத் திசை திருப்பி அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தாலிக்கொடியை பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்து சித்ரா போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஆட்டையாம்பட்டியில் உள்ள பஞ்சாபி தாபாவில் 2 பேர் தகராறில் ஈடுபட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்று விசாரித்த போலீசார் 2 பேரும், சித்ராவின் தாலிகொடியை பறித்து சென்றவர்கள் என தெரிய வந்தது. இதை தொடர்ந்து  கிருஷ்ணன், சுப்ரமணியை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாலிக்கொடியை மீட்டு 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>