துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரை 15 ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்ப நடவடிக்கை கலெக்டரிடம் முருகன் எம்எல்ஏ மனு

கிருஷ்ணகிரி, ஜன.12:வேப்பனஹள்ளி எம்எல்ஏ  முருகன், நேற்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட நேரலகிரி கிராமத்தில் மாரியம்மன் திருவிழா நடந்தது. விழாவை காண வந்த மக்கள் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமி மேகாஸ்ரீ, முதியவர் முனிபாலன் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு வழங்க வேண்டும். சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சி கனசூர் கிராமத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தூள்செட்டி ஏரிக்கு கால்வாய் கொண்டு செல்லப்படுகிறது. வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சானமாவு, பீர்ஜேப்பள்ளி, கொம்மேப்பள்ளி, உத்தனப்பள்ளி, அயர்னப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் 15க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே கால்வாயை துப்புகானப்பள்ளி முதல் நாகமங்கலம் வரையில் 15 ஏரிகளுக்கு தண்ணீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது, உத்தனப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிகாந்த், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், நிர்வாகி சுந்தரேசன், விவசாய அணி நிர்வாகி முருகன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ரவி உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: