கடத்தூர்,ஜன.12: தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடத்தூர் சில்லாரஅள்ளி, புட்டிரெட்டிப் பட்டி, மணியம்பாடி, தாளநத்தம் மற்றும் சுற்றியுள்ள 24 கிராம ஊராட்சிகளை சேர்ந்த கட்டுமான தொழிலாளர்களுக்கு, தமிழக அரசு அறிவிப்பின்படி தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு நேற்று வழங்கப்பட்டது. இதை வாங்க நேற்று அதிகாலை 4 மணி முதலே கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொழிலாளர்கள் குவிந்தனர். காலை 10 மணியளவில் 500க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் உள்பட பெண்கள் திரண்டனர். கூட்டம் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கையாக இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் நீண்டதூரம் வரை பெண்கள் வரிசையில் காத்திருந்து, பொருட்களை வாங்கிச்சென்றனர். 8 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்த மூதாட்டிகள் நிற்க முடியாததால், ஆங்காங்கே மரத்தடியில் அமர்ந்து கொண்டனர். மாலை 5 மணி வரை வரிசையில் நின்றிருந்த பெண்கள், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிச்சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்த கடத்தூர் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக டோக்கன் வழங்கி இருந்தால் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கும். மேலும், கூடுதலாக பணியாளர்களை நியமித்து பொருட்களை வழங்காததால் மக்கள் பல மணி நேரம் காத்திருந்து வாங்கிச்செல்லும் அவலநிலை ஏற்பட்டது.