உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக வெட்டப்படும் மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

தர்மபுரி, ஜன.12: பாலக்கோடு அருகே உயர்மின் கோபுரம் அமைக்க நிலங்களில் வெட்டும்  மரங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பாலக்கோடு எருதுகூட்ட அள்ளி, சுக்கனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: எருதுகூட்ட அள்ளி, சுக்கனஅள்ளி கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களை வளர்த்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் நிலம் வழியாக உயர்மின்  கோபுரம் அமைக்கும் பணிக்காக 2 ஆயிரம் மரங்களை அற்றிட பட்டியல் எடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் மரங்களின் வயதை குறைத்து, மதிப்பீடு செய்து இழப்பீடு தொகையை குறைத்துவிட்டனர். எனவே, வெட்டும் மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியிருந்தனர். இதேபோல், மொரப்பூர் பகுதியைச் சேர்ந்த 54 குடும்பத்தினர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டம் கீழ் மொரப்பூர், நவலை, பொய்யப்பட்டி, அச்சல்வாடி, பொம்மிடி போன்ற பகுதிகளில் விவசாய தொழிலாளர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனவே, எங்களுக்கு தற்போது அறிவித்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தில் வீடு ஒதுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தனர்.

Related Stories:

>