வருவாய்த்துறையினரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தர்ணா போக்குவரத்து ஊழியர் போராட்டம்

தர்மபுரி,  ஜன.12: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஆலமரப்பட்டி பகுதியைச் சேர்ந்த  சின்னசாமி மகன் சிவக்குமார்(43). அரசு போக்குவரத்துக் கழகத்தில்  டிரைவராக பணியாற்றி வரும் இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சிவக்குமார்  தனது குடும்பத்துடன் வந்தார். அங்கு நின்றிருந்த கலெக்டர் காரின் அருகே தரையில் அமர்ந்து திடீரென குடும்பத்தோடு தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த போலீசார், சிவக்குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், ‘எங்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றை, வேறு  ஒருவர் பெயருக்கு மாற்றி, வருவாய்த்துறையினர் முறைகேடு செய்துள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு முதல் பாலக்கோடு தாலுகா அலுவலகம், ஆர்ஐ மற்றும்  விஏஓ அலுவலகத்தில் 70 முறை மனு அளித்தும் நடவடிக்கை  எடுக்கவில்லை. இதனால், பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால்,  என்னை தற்காலிக பணிநீக்கம் செய்துவிட்டனர். எனவே, மாவட்ட கலெக்டர் உண்மைத்தன்மையை விசாரித்து, எனது கிணற்றை மீட்டுத்தர வேண்டும். இல்லையென்றால்,  குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியல்லை’ என்றார்.

இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள், மனுவை பெற்றுக்கொண்டு சிவக்குமாரை சாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.மூதாட்டி தர்ணா தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உளிசேனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(80). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும், நீண்ட காலமாக நிலப்பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி லட்சுமியின் வீட்டுக்கு வந்தவர்கள், அவரது வீட்டை இடித்து சேதப்படுத்தி விட்டு சென்றனர்.  இதனால், வீடின்றி தவிப்பிற்குள்ளாகி வரும் லட்சுமி நேற்று காலை தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மகன் ராஜேந்திரனுடன் சென்றார். பின்னர், தனது வீட்டை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். உடனே, அங்கிருந்த போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மனுவை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: