சென்னை: மழைநீர் வெள்ளம் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு தேவையான உதவிகளை பாதுகாப்புடன் செய்திட வேண்டும் என்று கழக தோழர்களை கேட்டுக்கொள்கிறேன். பருவமழை காலத்தில் மக்கள் சிரமத்துக்குள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
