×

ஆன்லைன் ரம்மியில் பொங்கல் பரிசு பணத்தை இழந்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை

பூந்தமல்லி: மதுரவாயல் பாக்கியலட்சுமி நகரை சேர்ந்த தமிழ்செல்வன் (20), சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக வீட்டில் யாரிடமும் சரிவர பேசாமல் இருந்த இவர், நேற்று  வீட்டின் பின்புறத்தில் இருந்த சிறிய கிணற்றுக்குள் திடீரென குதித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி பச்சையம்மாள், அலறி சத்தம் போட்டிருக்கிறார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால், சிறிய கிணறு  என்பதால் அதற்குள் இறங்கி தமிழ்செல்வனை மீட்க முடியவில்லை. இதுகுறித்து மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வீரர்கள், கிணற்றுக்குள் இறங்கி சுமார் ஒரு மணி நேரம் போராடி தமிழ்செல்வனை  சடலமாக மீட்டனர். மதுரவாயல் போலீசார், சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தமிழ்செல்வன் அவரது வீட்டில் இருந்த 2 சவரன் நகைகளை அடமானம் வைத்துள்ளார். மேலும், பொங்கல் பரிசு பணத்தில் ₹500 மட்டும் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு மீதி பணம் தொலைந்துவிட்டதாக  கூறியிருக்கிறார். அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, ஆன்லைன் ரம்மி விளையாடியதும், பணத்தை எல்லாம் ஆன்லைன் ரம்மியில் வைத்து விளையாடி தோற்றதும், இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என்ற  பயத்தில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

செல்போன் கேம் மோகத்தில்
பள்ளி மாணவி தற்கொலை
திருக்கழுக்குன்றம் வெள்ளாள தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன்,  லாரி டிரைவர். இவரது  மகள்   காவியா (18). பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தற்போது வீட்டில் உள்ளார். கடந்த  8ம் தேதி காவியாவின்  தந்தை புதிதாக ஒரு செல்போன்  வாங்கினார்.  அதில் காவியாவும் அவரது தம்பியும்  கேம் விளையாடுவது வழக்கம். நேற்று காவியா கேம் விளையாடியபோது, அவரது  தம்பி அடம் பிடித்து போனை பிடுங்கியதால், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. இதை பார்த்த  அவர்களது தாய், இருவரையும்  கண்டித்துள்ளார். இதனால், மனமுடைந்த காவியா   வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : College student ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை