தனியாருக்கு பணிகளை ஒதுக்கியதால் 500 தூய்மை பணியாளர்களின் வேலை காலி: ரிப்பன் மாளிகையில் 300 பேர் ஆர்ப்பாட்டம்

சென்னை: தனியாருக்கு பணிகளை ஒதுக்கியதை கண்டித்து 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 15 மண்டலங்கள், 200 வார்டுகள் உள்ளன.  இவற்றில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இந்த பணியில் மொத்தம் 19 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு  வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி தேனாம்பேட்ைட, கோடம்பாக்கம், அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் தூய்மைப்பணி உர்பசேர் - சுமித் நிறுவனத்திற்கு  வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட மண்டலங்களுக்கான தூய்மை பணி ராம்கி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. பணிகளை எடுத்துள்ள உர்பேசர் நிறுவனம் உடனடியாக பணிகளை எடுத்து செய்து  வருகிறது. ராம்கி நிறுவனம் விரைவில் பணிகளை தொடங்க உள்ளது.

இந்நிலையில், தனியாருக்கு அளிக்கப்பட்ட மண்டலங்களில் பணியாற்றி வந்த நிரந்தர தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி வசம் உள்ள தண்டையார்பேட்ைட, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட மண்டலங்களில் பணி  அமர்த்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தனியாரிடம் அளிக்கப்பட்ட மண்டலங்களில் உள்ள நிரந்தர பணியாளர்கள் மாநகராட்சி வசம் உள்ள மண்டலங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த மண்டலங்களில்  பணியாற்றி வரும் ஒப்பந்த பணியாளர்கள் வேலை இழக்கும் நிலை உள்ளது.தனியாரிடம் வழங்கப்பட்ட மண்டலங்களில் உள்ள நிரந்தர பணியாளர்கள் அண்ணா நகர் மண்டலத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதனால், இந்த மண்டலத்தில்  பணியாற்றி வந்த 500 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு வந்த தொழிலாளர்களை திடீரென்று பணிக்கு வர வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியதால் தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து முதலில் அண்ணா நகர் மண்டல  அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 300க்கு மேற்பட்டவர்கள் ரிப்பன் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்டரல் ரயில் நிலையம் அருகில் உள்ள வாயில் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும்  தொழிலாளர்களால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: