×

தொடர் நீர்வரத்து காரணமாக அருவிபோல் காட்சியளிக்கும் தையூர் ஏரி: பொதுமக்கள் குளியல் போட்டு ஆட்டம்

திருப்போரூர், டிச.4: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தையூர் ஏரியில் நீர் நிரம்பி வழிந்து அருவிபோல் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், பொன் விளைந்த களத்தூர் ஆகிய ஏரிகளுக்கு அடுத்து தையூர் ஏரி மூன்றாவது பெரிய ஏரியாக விளங்குகிறது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு முக்கிய நீர்ப்பாசன மையமாகவும் தையூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்புற மக்களின் நிலத்தடி நீராதாரமாகவும் இந்த ஏரி விளங்குகிறது. சுமார் 417 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பிரமாண்ட ஏரி மழைக்காலங்களில் நிரம்பி வழியும்போது, கடல்போல் காட்சி அளிக்கிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறும் கலங்கல் என்று அழைக்கப்படும் பகுதி சுமார் 300 அடி தூரத்திற்கு உள்ளது. இந்த, கலங்களில் உபரிநீர் குற்றால அருவிபோல் பேரிரைச்சலோடு வெளியேறும் காட்சியைப் பார்க்க சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் வந்து செல்லும் அளவுக்கு சுற்றுலாத் தலமாக மாறி விடுகிறது.

அதன்படி இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி 3 வாரங்கள் ஆனாலும், தையூர் ஏரி நிரம்பும் அளவிற்கு மழை பெய்யாத நிலையே இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தையூர் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் தண்ணீர் அதிகரித்து நேற்று காலை முதல் ஏரி நிரம்பி வழியத் தொடங்கியது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் பல்வேறு வாகனங்களில் தையூர் ஏரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நேற்று ஏரியில் இருந்து வெளியேறி அருவில்போல் கொட்டும் உபரி நீரில் குளித்து மகிழ்ந்தனர். இதையடுத்து திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஏரிப்பகுதிக்கு சென்று பார்வையிட்டார். மேலும், வருவாய்த்துறை சார்பில், பொதுமக்கள் ஏரியில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Taiyur Lake ,Thiruporur ,Chengalpattu district ,Madhurantakam ,Ponvilintha Kalathur ,Taiyur… ,
× RELATED தும்பவனம் கால்வாய் பகுதியில் சாலையோர...