இலவச வீட்டுமனை வழங்க கோரி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி பெண்: கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

திருவள்ளூர்: செங்குன்றம் அடுத்த நாரவாரிகுப்பம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கனிமொழி(38). மாற்றுத்திறனாளி. இவரது கணவர் ராஜா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தற்போது கனிமொழி தனது இரண்டு பெண்  குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவர் தனக்கு இலவச வீட்டு மனை வழங்க கோரி கடந்த இரண்டு வருடங்களாக அதிகாரிகளிடம் மனு அளித்து வருகிறார். இருப்பினும் அவர் அளித்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுடன் பலரிடம் புலம்பி வந்தார். இந்நிலையில், நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு கனிமொழி மனுவுடன் வந்து தான் கொண்டுவந்த பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல்  பாட்டிலை எடுத்து திடீரென தன் உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அங்கிருந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனிமொழி கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை கைப்பற்றி அவரிடம் விசாரணை  செய்தனர். அப்போது அவர் தனக்கு இலவச வீட்டு மனை வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலை செய்து கொள்வதாக வந்ததாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரை சமாதானம்  செய்த போலீசார் அவரை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் விரைவில் இலவச வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.  பின்னர் போலீசார் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். இலவச வீட்டுமனை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளி பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: