அம்மன் கோயிலில் உண்டியல் அபேஸ்: மர்மநபர்களுக்கு வலை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் மாமல்லன் நகர் ஆர்ச் அருகில் கருமாரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை வாசுதேவன் என்பவர் நிர்வாகம் செய்கிறார். இங்கு, ஏராளமான பக்தர்கள் தினமும் தரிசனம் செய்கின்றனர்.  குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பூஜை நடந்தது. இரவு 8.30 மணியளவில் அர்ச்சகர் கோயிலை பூட்டிசென்றார். நேற்று காலை கோயிலுக்கு  பக்தர்கள் வந்தனர். அப்போது கோயிலின் முன்பக்க கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி வாசுதேவனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவர் அங்கு சென்று பார்த்தார். அப்போது, கோயிலின்  உள்ளே வைக்கப்பட்டு இருந்த உண்டியல் பீடத்தை, உண்டியலை மர்மநபர்கள் எடுத்து சென்றது தெரிந்தது. தகவலறிந்து விஷ்ணு காஞ்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அந்த உண்டியலில் தோராயமாக ₹10 ஆயிரம்  இருக்கலாம் என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: