வீட்டு மனை வரன்முறை தடையில்லா சான்று தர 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலெக்டரின் உதவியாளர் கைது

செங்கல்பட்டு: வீட்டு மனை வரன்முறை தடையில்லா சான்று வழங்குவதற்கு,  20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கலெக்டரின் உதவியாளரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர். சென்னை மைலாப்பூரை சேர்ந்தவர் ஆனந்தன் (52).  ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் மறைமலைநகர் நகராட்சி நின்னகரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் வீட்டுமனைபிரிவு போட்டு விற்பனை செய்ய திட்டமிட்டார். அதன்படி, அந்த நிலத்தில் வீட்டு  மனை பிரிவு அமைக்க வேளாண் துறை அலுவலகத்தில் இருந்து தடையில்லா சான்று கேட்டு செங்கல்பட்டு திம்மாவரம் பகுதியில் உள்ள வேளாண் துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மனு அளித்தார்.  ஆனால் ஆனந்தனுக்கு தடையில்லா சான்று வழங்கவில்லை. இதையடுத்து ஆனந்தன், இணை இயக்குநர் அலுவலகத்தில், செங்கல்பட்டு கலெக்டரின் நேர்முக உதவியாளராக உள்ள வேளாண் அதிகாரி சுகுமாரிடம் நேரில் சென்று கேட்டார்.  அப்போது, வீட்டுமனை அமைக்க தடையில்லா சான்று பெற  20 ஆயிரம் லஞ்சம் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால், தடையில்லா சான்று பெற முடியாது என கலெக்டரின் நேர்முக உதவியாளர் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆனந்தன், லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. இதுகுறித்து, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். பின்னர், போலீசாரின் அறிவுரைப்படி ஆனந்தன், நேற்று 20 ஆயிரத்துடன் வேளாண்  அதிகாரி சுகுமாரை சந்தித்து, பணத்தை கொடுத்தார். அதை அவர் வாங்கியதும், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், அவரை சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர். பின்னர்  அவரை, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, சுகுமாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவரை செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related Stories: