பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடல்

நாகர்கோவில், ஜன.12: குமரி மாவட்டம் முழுவதும் சாரல் மழை நீடித்து வரும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டுள்ளது குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் 13ம் தேதி வரை மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் இந்த மழை காணப்படுகிறது.

மாவட்டத்தில் நேற்று காலை வரை அதிகபட்சமாக பாலமோரில் 22.4 மி.மீ மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றார்-1 அணைகள் மூடப்பட்டுள்ளன. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 42.83 அடியாகும். அணைக்கு 580 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது.பெருஞ்சாணி நீர்மட்டம் 65.49 அடியாகும். அணைக்கு 330 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 10.96 அடியாக நீர்மட்டம் இருந்தது. சிற்றார்-2ல் 11.05 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 10.10 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 22.31 அடியும், முக்கடல் அணையில் 17.6 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது.

Related Stories:

>