சமத்துவ பொங்கல் விழா பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்க்க திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம்

திருச்சி, ஜன. 12: பொங்கல் பண்டிகை நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்று மாநகர கமிஷனர் லோகநாதன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வெளியூர்களில் உள்ளவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். பொதுமக்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சிறப்பு பஸ்கள் சென்னையில் இருந்து நேற்று முதல் இயக்கப்பட்டது.

அதைதொடர்ந்து பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் நெரிசலை குறைக்கும் வகையில் மாநகர கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர கமிஷனர் லோகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலையில் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டும் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும். வேன், கார் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்தக்கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விதிமீறுபவர்கள் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறை 100 மற்றும் வாட்ஸ் அப் எண் 96262 73399க்கு தெரிவிக்கலாம்.

பொங்கல் பண்டிகையையொட்டி இன்று முதல் (12ம் தேதி) வரும் 19ம் தேதி வரை தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் தற்காலிக பஸ் நிலையத்தில் இயக்கப்படும். தஞ்சாவூர் மார்க்கம்- சோனா மீனா தியேட்டர் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை, புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கத்துக்கு மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து இயக்கப்படும். தென்மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியாக சென்னை செல்லும் அரசு பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை செல்ல வேண்டும். மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடங்களில் எவ்வித மாற்றமும் இல்லாமல் வழக்கம்போல் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மன்னார்புரத்துக்கு சுற்று பஸ்கள் இயக்க அரசு போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்காலிக பஸ் நிலையத்தில் பயணிகளின் தேவைக்காக குடிநீர், கழிவறை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: