திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜன.12: பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட கோரி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கிட வேண்டும். கடந்த 2019-20ம் ஆண்டில் ஆனைக்கொம்பன் நோயால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரண தொகையினை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் சார்புடைய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஜோசப், துணைத் தலைவர்கள் சதாசிவம், பரந்தாமன், தியாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கோரிக்கைகள் குறித்து டிஆர்ஓ பொன்னமாளிடம் மனு அளிக்கப்பட்டது.

Related Stories: