மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் ரேஷன் கடைகள், கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம்

திருவாரூர், ஜன.12: மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் மூலம் ரேஷன் கடைகள் மற்றும் அரசு கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எம்எல்ஏ பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார். திருவாரூர் நகராட்சிக்குடபட்ட 9வது வார்டு கேக்கரை பகுதியில் திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டமானது மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பிரகாஷ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பொதுமக்கள் கேக்கரை பகுதியில் உரிய முறையில் தெருவிளக்கு எரிவதில்லை, குடிநீர் கிடைப்பதில்லை, குளம், குட்டைகள் தூர்வாரவில்லை, சாலைகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன மற்றும் நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா கேட்டும் வழங்கப்படவில்லை என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்தனர்.

தொடர்ந்து பூண்டி கலைவாணன் பேசிய தாவது: விரைவில் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைய உள்ள நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். அதுவரையில் நிதியிலிருந்து பொதுமக்களின் குடிநீர் பிரச்னை உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும். மேலும் மறைந்த தலைவர் கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதால் கடந்த 10 ஆண்டுகளாக இந்த திருவாரூர் பகுதியில் எந்தவித அரசு திட்டங்களையும் அதிமுக தலைமையிலான அரசு செயல்படுத்தாமல் இருந்து வருகிறது.

இதில் மனுநீதிச் சோழனுக்கு மணிமண்டபம் என்ற பெயரில் ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அந்த இடமும் தற்போது கேட்பாரற்று நகராட்சி மூலம் குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக உள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மத்திய பல்கலைக்கழகம், புதிய பஸ் நிலையம் போன்ற பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி என்று அரசு பணத்தில் விளம்பரம் செய்யும் அதிமுக அரசு பொள்ளாச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல் உள்ளது. இது தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கூட அனுமதி அளிக்கவில்லை.

எனவே இந்த ஆட்சியை அகற்றுவதற்கு தமிழக மக்கள் தற்போது முடிவு செய்துவிட்டனர். மேலும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் மூலம் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் ஆபத்தானவை என்பதை கருத்தில் கொண்டு தொடர்ந்து 48 நாட்களாக கடும் குளிரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு அலட்சியம் செய்து வருகிறது. இந்த வேளாண் சட்டம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் தனியாரை கொண்டுதான் நெல்கொள்முதல் நடைபெறும் என்ற நிலையில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் அபாயம் ஏற்படுவதுடன் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் திட்டமும் நிறுத்தப்பட்டு ரேஷன் கடையை மூடும் அபாயமும் ஏற்படும் என்பதால் இந்த சட்டத்தை முழுமையாக மத்திய அரசு திரும்பப் பெறும்வரை விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர். இதற்கு பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என்பதுடன் இதற்கு ஆதரவு அளித்துள்ள அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>