விபத்து சிகிச்சை செலவை அரசே ஏற்க கோரி 27ல் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கம் முடிவு

மன்னார்குடி, ஜன.12: டிஎன்சிஎஸ்சி சுமைதூக்கும் தொழிலாளர்கள் சுமை பணியில் ஈடுபடும்போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்க வேண்டும் என வலியுறுத்தி வரும் 27ம் தேதி திருவாரூர் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக ஏஐடியூசி நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமைதூக்கும் தொழிலாளர் சங்கக் கூட்டம் புஷ்பநாதன் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில பொதுச்செயலாளர்கள் சந்திரகுமார், புண்ணீஸ்வரன், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத், மாநில செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் தாலுகாவை சேர்ந்த சுமைதூக்கும் பணி செய்து இறந்த 10 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் விதம் நிதியுதவி வழங்கப்பட்டது. கூட்டத்தில், சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு எடை கூலியும் ஏற்றுக்கூலியும் சேர்த்து ரூ.3.24 மட்டுமே வழங்கப்படுகிறது. தனியாருக்கு இணையாக ரூ.15 கூலி வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்பட வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். பணியின்போது விபத்து ஏற்பட்டால் சிகிச்சை செலவை அரசே ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ம் தேதி திருவாரூர் மண்டல அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முன்னதாக சங்கர் வரவேற்றார். சிவசாமி நன்றி கூறினார்.

Related Stories: